கோவை:
கூடுதல் மின்சாரம் வாங்க விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
நாங்கள் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை. தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் சரியாக நடைபெற்றிருந்தால் இந்நேரம் 160 தொகுதிகளில் கூட வெற்றி பெற்று இருப்போம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிமுக தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலைமைதான் திமுகவிற்கும் ஏற்படும்.
ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசும் இவர்களுக்கு மக்கள் எதை நம்பி வாக்களிப்பார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து தேர்தல்களிலும் திமுக மற்றும் அதிமுக தோல்வியை மட்டுமே தழுவும். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவர்கள் டெபாசிட் பெற முடியாது. நாங்கள் வெற்றி பெறுவோம்.
நெய்வேலியில் இருந்து மத்தியத் தொகுப்புக்கு வரும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. அதனால் தற்காப்பிற்காக ஜெனரேட்டரைப் பயன்படுத்துமாறு தான் கூறியிருக்கிறோம். தொழில்துறையினருக்கு மின் தடையை நாங்கள் செய்யவில்லை. தற்காப்பு காரணமாகவே ஒரு சில பகுதிகளில் அதுபோன்ற அறிவிப்புகளைத் தெரிவித்தோம். எந்தெந்த நாட்களில் அந்த மின்சாரம் கிடைக்கவில்லையோ, அதற்கான பீக் ஹவர்ஸிற்கு மட்டும்தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
பற்றாக்குறையால் கடந்த வாரம் ஓரிரு இடங்களில் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் மின்னிறுத்தம் இருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது. விரைவில் கூடுதல் காலம் மின்சாரம் வாங்க டெண்டர் விடப்பட உள்ளதுஎன தெரிவித்தார்.